கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இந்த நிலையில் மாநிலத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனரான சி.எஸ்.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இன்று முதல் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். இதில் கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். கர்நாடகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

கடந்த 2 நாட்களில் மட்டும் உத்தர கன்னடா மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், சிவமொக்கா மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. பெங்களூருவை பொறுத்தவரை பரவலாக மழை பெய்யக்கூடும். பெங்களூருவில் அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பமும் இருக்கக்கூடும்.

ஆசிரியர் - Editor II