காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவு!

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவு!
குடும்ப வன்முறையில் தலையிட்ட காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் சாவடைந்துள்ளார். 
 
நேற்று திங்கட்கிழமை மாலை Loire நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Place du 14-Juillet in La Talaudière பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அவச்சர இலக்கமான 17 இற்கு அழைப்பெடுத்துள்ளார். தமது கணவர் தம்மை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுவதாக அவர் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். 
 
அங்கு, குறித்த வீட்டில் வசித்த பெண்ணை அவரது கணவர் (முதன் நாள் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அறிய முடிகிறது) அச்சுறுத்தியுள்ளார். 
 
காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்ததும், குறித்த 40 வயதுடைய அவருடைய கணவர் சமையறையில் இருந்த கத்தி ஒன்றை உருவி எடுத்து அதிகாரிகளை நோக்கி வந்துள்ளார். 
 
மின்சார துப்பாக்கியால் அவரை சுட்டு, கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டனர். சில தடவைகள் மின்சார துப்பாக்கியால் சுட்டும் அவர் மிக ஆக்ரோஷமாக கட்டுக்கடங்காமல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவே முற்பட்டுள்ளார். 
 
இப்போது அதிகாரிகள், மின்சார துப்பாக்கியை வைத்துவிட்டு, சேவைத்துப்பாக்கியை உருவி எடுத்து, ‘கத்தியை கீழே போட்டுவிட்டு’ சரணடைய வற்புறுத்தினார்கள்.  ஆனால் அதையும் மீறி தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதால், அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். 
 
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். 
 
மேற்படி சம்பவத்தை காவல்துறையினர் விபரித்தனர். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினருக்கான காவல்துறையான IGPN அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 
ஆசிரியர் - Editor II