இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவு

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவு

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ நேற்று (06) தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொடவும், உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டனர். 

இதனை விடவும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டியவும் உப செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிடுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இந்நாட்டுடன் முறையான இராஜதந்திர உறவுகளை முதலில் ஏற்படுத்திக் கொண்ட ஐரோப்பிய நாடாகவும், நீண்டகாலம் பலமான உறவுகளைக் கொண்ட நாடாகவும் பிரான்ஸ் காணப்படுகிறது என்றார். 

காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் ஒப்பந்தத்தின் செயற்றிட்டத்துக்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். 

ஆசிரியர் - Editor II