சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு சிறை.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு சிறை.
சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் தீர்ப்பளித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களில் இரண்டு பேருக்கு எதிராக சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டும் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களில் இருவர், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தமை ஆகிய குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய குற்றவாளிகள் இருவரும் இரண்டு வார கால சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்கு  7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமும் செலுத்தவேண்டும் என மேலதிக நீதிவான் தீர்ப்பளித்தார்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 8 பேரையும்  7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்று அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை 3 மாதங்களுக்கு இடைநிறுத்திவைக்க நீதிமன்றப் பொலிஸ் அலுவலகருக்கு கட்டளையிட்டார்.
ஆசிரியர் - Editor II