ஆவா குழுவை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல - யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி விஜித குணரட்ண

ஆவா குழுவை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல - யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி விஜித குணரட்ண
             

                                         -
ஆவா குழுவை சேர்ந்த இளையோர்களை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல, அவர்களை அடக்க கூடிய ஆற்றல், அனுபவம் ஆகியன பொலிஸாரிடம் நிச்சயம் உள்ளன, ஆனால் அவர்களுடைய குற்றங்கள் சட்டபடி சிறியவையாக உள்ளன, இதனால் கைதான பின்னர் விரைவாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றார்கள்  என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி விஜித குணரட்ண தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வன்முறை அற்ற இயல்பு சூழலை கட்டி எழுப்புவது தொடர்பாக இந்து - பௌத்த சங்க தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரரின் தலைமையில் சர்வ சமய தலைவர்கள் கடந்த வாரம் ஒன்று கூடி ஆராய்ந்தார்கள். இதில் விசேட அழைப்பின் பெயரில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கலந்து கொண்டார். இவரிடம் நேரில் நிலைமையை கேட்டறிந்தார்கள்.

யாழ்ப்பாண மக்களை அச்ச பீதியில் ஆழ்த்தி இருக்கின்ற வாள் வெட்டு சம்பவங்கள், ஆவா குழு ஆகியன தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தவை வருமாறு:

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்களை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல. அவர்களை அடக்க கூடிய ஆற்றல், அனுபவம் ஆகியன பொலிஸாரிடம் நிச்சயம் உள்ளன. ஆனால் அவர்களுடைய குற்றங்கள் சட்டப்படி சிறியவையாக உள்ளன. இதனால் கைது செய்யப்பட்ட பின்னர் விரைவாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றனர். இது ஜனநாயக நாடு. புலிகளால் குற்ற செயல்களுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட்டது போல பொலிஸாரால் தண்டனை வழங்க முடியாது. 

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்கள் நோஞ்சான்களாக உள்ளனர். ஒழுங்காக வாள் பிடிக்கவோ, முறையாக வெட்டவோ உண்மையில் தெரியாத கற்று குட்டிகள். ஆனால் தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து மக்களை பயமுறுத்துகின்றனர். இவர்களின் வாள்வெட்டு தாக்குதல்களில் இது வரை யாருமே மரணிக்கவில்லை. அதே போல யாருமே பாரிய காயம் அடையவில்லை. ஆவா குழுவினர் இது வரை தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தியதாககூட இல்லை. இதனால்தான் நாம் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றபோதெல்லாம் இவர்களின் குற்றங்கள் சட்டப்படி சிறியவையாக இருப்பதால் விரைவாகவே மீண்டும் வெளியில் வந்து விடுகின்றார்கள். ஊடகங்கள்தான் சம்பவங்களை ஊதி பெருப்பித்து எழுதி மக்களை அச்ச பீதியில் ஆழ்த்தி உள்ளன. அதே போல அரசியல்வாதிகள் அவர்களுடைய சுயநல அரசியலுக்காக இவை போன்ற சம்பவங்களை கையில் எடுத்து உள்ளார்கள். உதாரணமாக அவருக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளை இரண்டு மாதங்களில் முடிவுக்கு கொண்டு வருவார் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். அதே போலதான் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று பேசுகின்றனர். ஆனால் இவ்வாறு பேசுகின்ற அரசியல்வாதிகளின் பிள்ளைகள் புலம்பெயர் தேசத்திலோ அல்லது கொழும்பிலோதான் உள்ளனர். அதே போல சட்டத்தரணிகள் ஆவா குழுவினரை காப்பாற்றி விடுகின்றனர். அப்பாவிகளை பொலிஸார் பிடித்து, அவர்களின் கையில் ஆயுதங்களை திணித்து, நீதிமன்றத்தில் ஆஜராக்கி, குற்றவாளிகள் ஆக்க பார்க்கின்றனர் என்று வாதாடுகின்றனர்.

ஆவா குழுவின் பழைய தலைவர் சன்னா இந்தியாவுக்கு தப்பி ஓடி சுவிற்சலாந்து போய் உள்ளார். இப்போது ஆவா குழு இரண்டு, மூன்று குழுக்களாக உடைந்து நிற்கின்றது. கடந்த அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துமே இவர்களுக்கு இடையிலான குழு மோதல்களே ஆகும். ஆவா குழுவை சேர்ந்த யாரும் எமது உறவினர்கள் அல்லர். நாம் வெளியில் இருந்து கடமைக்கு வந்து இருப்பவர்கள். நாம் இங்கு நிரந்தரமாக இருக்க போவதும் இல்லை. நான் கண்டியை சேர்ந்தவன். எனக்கு கண்டியில் எனது மனைவி, மக்களுடன் வாழத்தான் ஆசை. இந்த ஆசை இயல்பானது. இரு வருடங்கள்தான் நாம் பொதுவாக ஒரு இடத்தில் கடமையாற்றுவோம். பிறகு வேறிடத்துக்கு மாற்றமாகி சென்று விடுவோம். ஆகவே எமக்கு இவர்களை தப்ப வைக்க வேண்டிய அவசியம் எதுவுமே கிடையாது. அதே நேரம் நாம் கடமையாற்றுகின்ற இடங்களில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய கடமை பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இல்லையேல் எமது தலைமையகத்துக்கு பதில் கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். எல்லா இடங்களிலுமே குற்ற செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் தென்னிலங்கையில் உள்ள இடங்களுடன் ஒப்பிடுகின்றபோது யாழ்ப்பாணத்தில் குற்ற செயல்கள் குறைவாக உள்ளன என்பதே யதார்த்தம் ஆகும். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் முதல் 06 மாதங்களும் 351 குற்ற செயல்கள் பதிவாகி உள்ளன. கல்கிசையில் 900 குற்ற செயல்கள் பதிவாகி உள்ளன. ஆனால் எந்த இடத்திலும் குற்ற செயல்களை பூச்சிய மட்டத்துக்கு கொண்டு வரவே முடியாது. 

எல்லா திணைக்களங்களிலும் சில இலஞ்ச பேர்வழிகள் இருக்கவே செய்வார்கள். இதற்காக என்னால் எனது உத்தியோகத்தர்களுக்கு பின்னால்  கண்காணிப்பு கமராக்களை போட்டு வைத்திருக்க முடியாது.  தமிழ் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ள யாழ்ப்பாண பொதுமக்கள் தயங்குகின்றனர். ஏனென்றால் எதிராளியிடம் காட்டி கொடுக்கப்படலாம் என்கிற அச்சம் அவர்களுக்கு உள்ளது. எனவே சிங்கள பொலிஸாரிடம் முறையிடவே விரும்புகின்றனர். நான் அண்மையில் வேம்படி மகளிர் கல்லூரியில் செயலமர்வு ஒன்றை நடத்தினேன். அப்போது அவர்கள் எதிர்காலத்தில் என்ன உத்தியோகம் பார்க்க விரும்புகின்றனர்? என்று கேட்டேன். வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி... என்றுதான் பலரும் சொன்னார்கள். பொலிஸாராக வர விரும்புபவர்களை கை உயர்த்த சொன்னேன். இருவர் அல்லது மூவர் மாத்திரம்தான் பொலிஸாராக வர விருப்பம் வெளியிட்டனர். சுமார் 200 பெண் பொலிஸாரை யாழ்ப்பாணத்தில் ஆட்சேர்ப்பு செய்ய நாம் விளம்பரம் செய்து இருந்தோம். ஆனால் அதற்கு 12 பேர் மாத்திரமே விண்ணப்பித்தனர். யாழ்ப்பாணத்தாருக்கு பொலிஸ் உத்தியோகம் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. நல்ல பின்புலம் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிற யாழ்ப்பாணத்தார் பொலிஸில் இணைவதில்லை. மேலும் 30 வருட கால யுத்தத்துக்குள் யாழ்ப்பாணம் அழுந்தி கிடந்தது. ஆகவே நாம் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு ஆட்சேர்ப்பு மேற்கொண்டபோது அவர்களுடைய பின்னணி குறித்து விசாரித்து தகவல் சேகரிக்க அவகாசம் போதவில்லை. ஆகவே இந்நிலையில்  தமிழ் தெரிந்த பொலிஸாரையே இங்கு நாம் கணிசமான அளவில் கடமையில் ஈடுபடுத்த வேண்டி உள்ளது. இதனால் தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு தமிழ் கற்பிக்க தொடங்கி உள்ளேன். பொலிஸில் இணைகின்றபோது ஒரு வருட முழு நேர தமிழ்மொழி பயிற்சி வழங்கப்படுகின்றார்கள்.தமிழ் சார்ஜன்ட் ஒருவர் என்னிடம் உள்ளார். எனக்கு தமிழ்மொழி பரிச்சயமாகி உள்ளது. நான் முறைப்பாடு செய்ய வருகின்ற மக்களை தமிழ்மொழியிலேயே முறைப்பாடு செய்ய ஊக்குவிக்கின்றேன். மேலும் தமிழ்மொழியிலான உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரை ஒன்றையும் நான் பயன்படுத்தி வருகின்றேன். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் தமிழ்மொழியிலேயே அனைத்து காரியங்களையும் செய்கின்றனர், தமிழில் படிக்க, தமிழில் பேச, தமிழராக வாழ முடிகின்றது, கச்சேரி அடங்கலாக அனைத்து அரசாங்க காரியாலயங்களும் தமிழிலேயே இயங்குகின்றன என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்கின்றேன்.

என் போன்ற உத்தியோகத்தர்கள் எமது கடமை காலத்தில் பெரும்பாலான பகுதியை போர் காலத்தில் செலவிட்டு உள்ளோம். இப்போது அமைதியான சூழலில் வேலை செய்யவே விரும்புகின்றோம். போருக்கு பின்னர் கட்டியெழுப்பப்பட்ட போர் அற்ற சூழல் குழம்பி போய் விட கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்கின்றோம். நாம் எமது கடமையை இதய சுத்தியுடனேயே செய்கின்றோம். உதாரணமாக கண்டி தலதா மாளிகையில் பெரஹரா நடக்கின்ற அதே கால பகுதியில் யாழ். நல்லூர் முருகன் கோவிலில் திருவிழா நடக்கின்றது. கண்டி தலதா மாளிகையில் பெரஹரா கால சேவையில் ஈடுபட 500 பொலிஸாரை தரும்படி என்னை கேட்டு இருந்தனர். ஆனால் நான் கண்டியை சேர்ந்தவனாக இருந்தும் பொலிஸாரை தர முடியாது என்று உறுதியாக பதில் அளித்து விட்டேன். ஏனென்றால் நல்லூர் திருவிழா கால சேவையில் ஈடுபட எனக்கு பொலிஸார் தேவை. நல்லூர் திருவிழா காலத்தில் தாலி அறுத்து செல்வதற்கு என்று ஒரு திருட்டு கூட்டம் வருகின்றது. இவர்களில் அநேகர் பெண்கள் ஆவர்.

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்கள் கனவுலகத்தில் வாழ்கின்றனர். மது கலாசாரத்தில் முழுகி உள்ளனர்.புதிதாக மது போதை கலாசாரம் ஒன்று யாழில் உருவாகின்றது. எல்லோருமே 17, 18, 19 வயது உடையவர்கள். இம்முறை க. பொ. த உயர்தரம் எழுதுகின்ற மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இக்குழுவில் உள்ளவர்களை எடுத்து கொண்டால் இவர்களுடைய உறவினர்களில் ஒருவராவது புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார். இதனால் இவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து பணம் நிறையவே வருகின்றது. அதே போல இவர்களை பெற்றோர் சரியாக கண்காணிக்க தவறி விட்டனர். மேலும் இவர்கள் நாட்டின் 30 வருட காலங்கள் யுத்த சூழலில் பிறந்தவர்கள். யுத்த வன்முறைகளின் தாக்கங்கள் இவர்களுக்குள் உள்ளன. பௌத்த சமயம் சாதியத்துக்கு எதிரானது. நாம் சாதி பார்ப்பதில்லை. ஆனால் உயர்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற யாருமே ஆவா குழுவில் இல்லை. அடக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருப்பதால் ஏனையோரை அடக்கி ஆள வேண்டும் என்று சண்டித்தனம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில் சந்து பொந்து உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பொலிஸாரை கடமைக்கு நிறுத்தி வைப்பது என்பது சாத்தியம் அற்ற விடயம் ஆகும். இதனால் குற்றம் புரிபவர்கள் மாற்று பாதையில் போய் தப்பி விடுகின்றனர். எனவே இவ்விடயத்தில் பொலிஸாரும், பொதுமக்களும் சேர்ந்து செயற்பட வேண்டி உள்ளது. ஆகவேதான் கிராமங்கள் தோறும் சிவில் பொலிஸாரை உருவாக்குகின்றோம். அதே நேரம் பொதுமக்கள் விரைந்து சரியான தகவல்களை தருகின்றபோது குற்றங்களை இலகுவாக கட்டுப்படுத்த முடியும். 

எமக்கு பிரிவினை வேண்டாம். எமது நாட்டை ஆண்ட வெளிநாட்டவர்களே எம்மை பிரித்தாண்டு அவர்களின் காரியங்களை சாதித்தனர். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. இலங்கை அபிவிருத்தி அடைய வேண்டும். இங்கு உள்ள அனைத்து இன மக்களும் நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும். யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைய வேண்டும். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் செழிக்க வேண்டும். யாழ்ப்பாண மக்கள் மீண்டும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். புலிகள் தமிழ் புத்திஜீவிகள் பலரையும் சுட்டு கொன்று விட்டனர். அபிவிருத்தி, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகியன யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்கின்றபோது அவர்கள் உலகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள். இளையோர்களும் உலகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள்.  எல்லா சமயங்களுமே அன்பையும், அறத்தையுமே போதிக்கின்றன. நமக்கு மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என்கிற தகவலை ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 பேருக்கு சொல்ல வேண்டும் என்பது எனது பிரார்த்தனை ஆகும்.

ஆசிரியர் - Editor II