வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை

வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை
வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 

வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 

கட்சி கோரியதற்கு அமைய உரிய முறையில் அவர் விளக்கம் கொடுக்க வில்லை என கூறி தமிழரசு கட்சியினால் அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கடந்தவாரம் நீக்கப்பட்டு உள்ளார். அது தொடர்பிலான கடிதம் கட்சியின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 

அந்நிலையில் தேர்தல் ஆணையகத்தால் , உள்ளூராட்சி உறுப்புரிமையும் நீக்கப்படுவதாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

அதனை அடுத்து தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை மற்றும் உள்ளூராட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை ஆகியவற்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 

அதில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து , அன்றைய தினம் வரையில் பிரகாசின் உறுப்புரிமை நீக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 

இதேவேளை ,குறித்த வழக்கில் தமிழரசு கட்சி உறுப்பினர் பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையாவது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என்பது குறிபிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II