சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் நவாஸ் ஷரிப் - ஆதரவாளர்கள் உற்சாகம்

சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் நவாஸ் ஷரிப் - ஆதரவாளர்கள் உற்சாகம்

ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான அவர்கள் வீடு திரும்பினர். 


இஸ்லாமாபாத்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். 

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷரிப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

மேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷரிப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை சாலையின் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர். ஷரிப்பின் விடுதலையை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். 
ஆசிரியர் - Shabesh