தமிழ் இன அழிப்பை செய்த இராணுவத்திற்கு காணிகளை விடுவிக்க பணம் கோருவது என்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும்

தமிழ் இன அழிப்பை செய்த இராணுவத்திற்கு காணிகளை விடுவிக்க பணம் கோருவது என்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும்
-க.ஹம்சனன்-
தமிழ் இன அழிப்பை செய்த இராணுவத்திற்கு தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க பணம் கோருவது என்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். 
தமிழ் மக்களை அழித்த இராணுவத்திற்கு மக்களின் ஒரு அங்குல காணியை கூட வழங்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மக்களிடம் இருந்து கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவிக்க நஸ்ர ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களது காணிகளில் உள்ள இராணுவமானது ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்பதுவே அனைத்து தமிழ் மக்களதும் கோரிக்கையாகவுள்ளது. இதனையே தமிழ் தலமைகள் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாற நிலையில் மக்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப அக் காணிகளிலிருந்து வெளியேற வேண்டியதே இராணுவத்தின் கடமையாகும்.
இதனை தவிர்த்து தாம் வெளியேற பணம் தர வேண்டும் அது தர வேண்டும் இது தர வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து மக்களை அச்சுறுத்துவதானது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். அத்துடன் வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்திக்கு ஒதுக்கும் பணத்தை இராணுவத்திற்கு வழங்கவும் கூடாது.
மேலும் யாழ்.கோட்டை என்பது தொல்லியல் சான்றாகும். அதனை இராணுவத்திற்கு வழங்க முடியாது. கோட்டை மாத்திரமல்ல ஒர் அங்குலம் எமது நிலம் கூட தமிழர்களை இனவழிப்பு செய்த இராணுவத்திற்கு வழங்க முடியாது என்றார்.

ஆசிரியர் - Editor II