மகாவலி எல் வலயத்தால் மீண்டும் தமிழர் பிரச்சனை தலைதூக்கும்! -- அந்தணன்

மகாவலி எல் வலயத்தால் மீண்டும் தமிழர் பிரச்சனை தலைதூக்கும்! -- அந்தணன்
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதற்காக  மீண்டும் அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது பிரச்சனை தலைதூக்கும் என்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் இன்றைய நிலைப்பாடாக காணப்படுகின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் அவர்கள் வாழ்வதற்கு உரிமை இல்லை பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்களை தமிழர்களின் நிலத்தில் குடியேற்றும் போது இனப்பிரச்சனைக்கான அடிக்கல் அங்கே நாட்டி வைக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை இதுதான் மகாவலி எல் வலயம் ஊடாக காணக்கூடியது.

பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் காணிகள் மகாவலி எல் வலயத்திற்குள் அபகரிக்கப்படுவதற்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த 03.10.18 அன்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள எல் வலய காணி சுவீகரிப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது என்றும் வடமாகாண ஆளுனரும் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி தீர்மானம் ஒன்றுக்கு வருவது என்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் (ஒக்டோபர்) வடக்கு மாகாணசபை காலாவதியாகவுள்ள நிலையில் மகாவலி விவகாரம் ஆளுனர் வசம் செல்கின்றது.

இது இவ்வாறு இருக்க ஏன் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்  தனது ஜந்து ஏக்கர் காணியும் மகாவலி எல் வலயம் அகரித்துள்ளது என்று சொல்கின்றார் கருநாட்டுக்கேணியினை சேர்ந்த கறுப்பையா.
1984 ஆம் ஆண்டுஅரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக தான் கருநாட்டு கேணிபகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்.தனது விவசாய நிலம் ஜந்து ஏக்கர் மேட்டு நிலம் மூன்று ஏக்கர் என்று நிலையான சொத்துக்கள் கட்டிய வீடுகள் அனைத்தினையும் விட்டு வெளியேறி முள்ளியவளை என்ற பகுதியில் வசித்து வருகின்றார்.

இவருடன் அயல் பிரதேசங்களான கொக்குளாயினைச் சேர்ந்த 508 குடும்பங்களும் கருநாட்டுக்கேணியினைச் சேர்ந்த 370 குடும்பங்களும் கொக்குத்தொடுவாயினைச் சேர்ந்த 861 குடும்பங்களுமாக ஆயிரத்தி ஜநூறிற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் பூர்வீக வாழ் இடங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள்.

1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோது 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தக மானியில் அறிவிக்கப்பட்டுள்ளது  2007 ஆம் ஆண்டு மகாவலி எல் வயத்தின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நகரில் உள்ள சின்னாறு வரை வரிந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் 74 கிலோமீற்றர் கொண்ட கடற்பகுதியில் 34கிலோ மீற்றர் மகாவலி எல் வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனை விட தமிழ்மக்களுக்கு சொந்தமான 2156 ஏக்கர் காணிகள் மகாவலி எல்வலயத்தின் ஊடாக பறிக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டுகின்றார்.

1984 ஆம் ஆண்டு தங்கள் வாழ் இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் போரின்போது பலர் உயிரிழந்தும் நாட்டினை விட்டும் வெளியேறியுள்ள நிலையில் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டார்கள்  சுமார் 25 ஆண்டுகளின் பின்னர் மக்கள் தங்கள் சொந்த இடங்களை பார்க்க கிடைத்த சந்தர்ப்பத்தை சாமி அம்மா என்பவர் சொல்கின்றார் தங்கள் ஒருபரம்பரை எங்கள் சொந்த நிலத்தில் வாழமுடியாமல் போய்விட்டது தற்போது உள்ள தலைமுறைதான் இனி எங்கள் நிலத்தில் வளத்தினை பெற்று வாழவேண்டும் 

கடல் தொழில், கால்நடை வளர்ப்பு விவசாயதொழில் போன்றன முதன்மையாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்த சாமி அம்மா இனி எங்களுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் வந்து 2012ஆம்ஆண்டு குடியேறினோம் என்றார்.

குடியேற்றத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தும் நோக்கிலே அரசாங்கத்தின் திட்டமிட்மிட்ட மகாவலி எல் வலயம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மகாவலி எல் வலயம் 6788 குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் 2012 தொடக்கம் 2018 ற்குள் முடிவிற்கு கொண்டுவரும் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது இதன் ஊடாக ஒவ்வொருவருக்கும் 2.5 ஏக்கர் நிலப்பரப்பினை வழங்கி குடியேற்றுவதே நோக்காக கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் ஒரு கட்டம் தான் வெலிஓயா ஊடாக பெரும்பான்மை மக்களுக்கு அதிகளவில் காணிகள் கொடுத்து குடியேற்றும் திட்டம்  இது பெரும்பான்னை அரசியல் தலைவர்களினால் திட்டமிட்டு நாசுக்காக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினை கடந்தகால புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி
கடந்த 2011 ஆம் ஆண்டு 3966 பெரும்பான்மை மக்களையும் 
2012 ஆம் ஆண்டு 6949 மக்களாக அது உயர்வடைந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு 4060 குடும்பங்களை கொண்டு 11174 பேராக அதிகரித்தது.
2014 ஆம் ஆண்டு 9290 ஆக காணப்பட்டு
2015 ஆம் ஆண்டு 11189 ஆக அதிகரித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 11189 ஆக காணப்படுகின்றது
2017 ஆம் ஆண்டு 11189 ஆகா காணப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டும் 11189 ஆக வெலிஓயா பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை மாவட்ட செயல புள்ளிவிரபத்தில் காட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தில் வெலிஓயா பிரதேசத்தில் வாழ்கின்ற பெரும்பான்மை இன மக்களின் விகிதாசாரத்தில் மாற்றம் காணாத நிலை காணப்பட்டுள்ளமை இந்த ஆய்வினை மேற்கொண்ட போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர்களின் தாயக பூமியாக காணப்படும் போது தமிழர்களின் ஆதிக்கம் அதிரிக்கக்கூடும் இதனை இவ்வாறான குடிப்பரம்பலை மேற்கொண்டு விகிதாசார கலப்பினை மேற்கொள்வதன் மூலம் ஒரு இனத்தின் வீரியம் குற்றவைக்கப்படுகின்றது என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வர் ஒய்வுபெற்ற ஆசிரியர் கந்தையா தெரிவிக்கின்றார்.
 
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மகாவலி அபிவிருத்தி வலயம் முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவலி நீரைச் சாட்டி மகாவலி அதிகாரசபை வடமாகாணக் காணிகளைக் கையேற்றுள்ளது என்று சாடியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை பெரும்பான்மை அரசு அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனையின் பொறியாக அது மாற்றம் காணும் என்பது திண்ணம் இந்த நிலையில் தற்காலிகமாக மகாவலி எல்வலயத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தினாலும் வடமாகாண ஆளுனரின் கீழ் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுக்கள் வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருப்பது காலத்தை இழுத்தடிப்பதன் ஊடாக தமிழர்களின் போராட்டத்தை திசைதிருப்பி திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் கொள்ளலாம்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழர்களின் இதயபூமி என்று வர்ணிக்கப்படும் தமிழ்மக்கள் பூர்வீக வாழ் இடங்களில் அந்த மக்களுக்கு உரித்தான காணியில் அந்த மக்கள் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் தொழில் செய்து வாழ வேண்டும் என்பது தமிழர்களின் இன்றைய அவாவாக காணப்படுகின்றது. 

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள எல்லைக்கிராமங்களை பலப்படுத்துவதன் ஊடாக அங்கு தமிழர்களின் வீரியம் கட்டி எழுப்பப்படும் என்பதுதான் வரலாற்று உண்மை.
ஆசிரியர் - Sellakumar