சபாஷ் ஐயா : வடக்கின் சிவாஜி புத்தளம் மக்களுக்காக குரல் கொடுத்தார்..!! இன்னும் ஐக்கியத் தேசியக் கட் சியின் நடிகர் திலகங்களைக் காணவில்லை..!!

சபாஷ் ஐயா : வடக்கின் சிவாஜி புத்தளம் மக்களுக்காக குரல் கொடுத்தார்..!! இன்னும் ஐக்கியத் தேசியக் கட் சியின் நடிகர் திலகங்களைக் காணவில்லை..!!
கொழும்பு குப்பைகளை புத்தளம் , அருவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசு கண்டும், காணமல் இருப்பது கவலையளிக்கிறது என வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சிவாஜிலிங்கம் புதன்கிழமை (10) தெரிவித்தார்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளத்தில் நேற்று புதன்கிழமை (10) பன்னிரெண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட பின்  கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ௯றினார்.
இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான ஐயூப் அஸ்மின், சட்டத்தரணி கேசவன் சயந்தன், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்ட புத்தளம் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Puttalam Human Development , Clean Puttalam அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் இயங்கும் ஏனைய தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் இந்த குப்பைத் திட்டத்திற்கு எதிராக சுழற்சி முறையில் இரவு, பகலாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் புத்தளத்தில் வாழும் மூவின மக்களுடப் இணைந்து கற்பிட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் , பள்ளிவாசல்கள் நிர்வாகளும் சுழற்சி முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் ௯றியதாவது,
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரைமார்க்கமாக கொண்டு வந்து புத்தளம் அருவக்காட்டுப் பகுதியில் கொட்டுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று (நேற்று புதன்கிழமை 10) 12 ஆவது நாளாக சுழற்சி முறையில் சத்தியாக்கிரக போராட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்வதற்காக வடமாகாண சபை உறுப்பினர்களான நாங்கள் இங்கு வருகை தந்தோம்.
ஒரு சமூகத்திற்கு பிரச்சினை என்று வரும்போற நாங்கள்  இனம், மொழி, பிரதேசம் என்று பார்ப்பது கிடையாது. இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தால் அதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
அண்மையில் காலியில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, நாங்கள் அங்கு சென்று அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கினோம். அதுபோல, புத்தளம் மக்கள் இந்த குப்பை பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குப்பைத் திட்டத்தினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை எண்ணி அச்சப்படுகிறார்கள்.
இந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஆகிய இரண்டு திட்டங்கள  மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களாலும் புத்தளத்தில் வாழும் மூவினத்தவர்ளும் இன்று வரை பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகிறாரார்கள். இவ்வாறு இருக்கையில், மூன்றாவது திட்டமாக கொழும்பு குப்பைகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
எனவே, இந்த குப்பைத் திட்டத்தினால் சுற்றாடலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதுடன், புத்தளத்தில் உள்ள உப்பளங்கள், மீற்பிடித்துறை, விவசாயம் என்பவும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
அத்துடன், புத்தளத்திற்கு மிக பக்கத்தில் உள்ள வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் கொழும்பில் இருந்து நாளொன்றுக்கு 1200 மெட்ரிக் தொன் குப்பைகளை தரை மார்க்கமாக கொண்டு வரும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் மக்கள் விபரித்தார்கள்.
இந்த குப்பை பிரச்சினை என்பது புத்தளத்திற்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை அல்ல. இது இலங்கையின் தேசியப் பிரச்சினையாக பார்க்கப்பட முடியும் என்பதால் நாங்கள் இங்கு வருகை தந்து போராட்டத்தை தலைமை தாங்கி நடாத்தும் குழுவோடும், மக்களுடன் கலந்துரையாடினோம்.
இலங்கையின் தேசியக் கொள்கையின் திண்மக் கழிவு அகற்றல் என்பது பாரதூரமான ஒரு பிரச்சினையாக இன்று மாறியிருக்கிறது.
எனவே, இந்த பிரச்சினைகளை சட்டரீதியாக அணுக வேண்டும் எனவும், தேசிய ரீதியாக கொள்கைகளை உருவாக்க ௯டிய இடமான பாராளுமன்றம் வரை இந்தக் குப்பைப் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்.

 

அதுமாத்திரமின்றி, பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒருநாள் விவாதம் நடத்தி எதிர்க் கட்சித் தலைவருக்கும், ஏனைய கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பாரதூரத்தை விளக்கப்படுத்தி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து இதற்கு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அப்போதுதான் இந்த போராட்டத்திற்கு பூரண பயன் கிடைக்கும். கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு வராமல் தடுப்பதற்கு நாங்கள் மத்திரமல்ல, தூய்மையான சுற்றுச்சூழலை விரும்புகின்ற அனைவரினதும் ஒத்துழைப்புக்களையும் பெற்று  தேவையான முயற்சிகளை முன்னெடுப்போம்.
கொழும்பில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை பலவந்தமாக புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு, மிகவும் அவசரமாக மாற்று வழியை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை ஆட்சியாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே, இனம், மொழி, பிரதேசங்களுக்கு அப்பால் புத்தளம் மக்கள் முன்னெடுத்துச் செல்கின்ற இந்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு நாங்களும் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.
மீதொட்டமுல்ல குப்பைகளால் கொழும்பில் வாழும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது என்பதை நாங்கள் மறுக்க முடியாது. எனினும், அந்த குப்பைகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்று அந்த வெளிமாவட்ட மக்களை கஷ்டத்திற்குள் உள்ளாக்குவதை கண்டிக்கிறோம்.
எனவே, மக்களை பாதிக்காத வகையில் இந்த திண்மக் கழிவு அகற்றல் திட்டத்தை வெளிநாடுகளை முன்னுதாரணமாக கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். எமது நாட்டுக்கு மிகவும் பக்கத்தில் உள்ள இந்தியாவில் ௯ட திண்மக் கழிவு அகற்றல் முகாமைத்துவம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, அந்த திட்டத்தை இலங்கையிலும் முன்னெடுப்பதற்காக உலக வங்கி அல்லது உலக நாடுகளின் நிதி மற்றும் ஆலோசனைகளைப் பெற்று, மக்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் குப்பை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களது தாழ்மையான கோரிக்கையாகும் என்றார்.
இதன்போது, குப்பைக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களக சந்திப்பதற்காக புதன்கிழமை மாலை விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர்கள், புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.
ஆசிரியர் - Editor II