இராமச்சந்திரனை தேடியே உயிரைவிட்ட தந்தை

இராமச்சந்திரனை தேடியே உயிரைவிட்ட தந்தை
யாழ். வடமராட்சி துன்னாலையில் கடந்த 06 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) என்பவரது தந்தையாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றது. மகனைக் காணாது தேடிப் போகாத இடமில்லை. தான் சாவதற்குள் மகனைப் பார்த்துவிட வேண்டும் என்று உடம்பில் தெம்பு இல்லாத போதும் கடைசி மூச்சு இருக்கும் வரை முயற்சி செய்துகொண்டே இருந்தார். மகனின் முடிவில்லாமல் கடந்த  06 திகதி அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. 

16.02.2007 இரவு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுவால் துன்னாலை சிங்கள இராணுவ முகாம் அமைந்த கலிகைச் சந்தியில் வைத்து கடத்தப்பட்டார். கடத்தப்பட்டு கண்ணைக்கட்டி வாகனத்தில் கொண்டு சென்ற போது ஒரு தடவை தனது அக்காவுடன் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். தன்னை கடத்திச் செல்வதாக கூறியுள்ளார். அதன் பின் தம்பியின் அழைப்பு வரும் என்று பார்த்து பார்த்து இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  

86 வயதில் காலமாகியுள்ளார். தனது இறுதிக் காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி பெற்றுக்கொள்வதிலும் அமரர் சுப்பிரமணியம் விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்திருந்தார். தனது வயோதிப மனைவி சகிதம் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்றுமே அமரர் சுப்பிரமணியம் பின்னின்றதில்லை. தன்னை தேடி வரும் ஊடக செயற்பாட்டளர்களுடன் தனது மகனது விடுதலைக்காக அவர் நீண்ட பயணத்தை செய்துமிருக்கின்றார்.

தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து அவரை கண்டறிய தேடி அலைந்து பதிலேதும் கிடைக்காமலேயே அவர் இந்த மண்ணிலிருந்து பிரிந்துள்ளார். தான் இறப்பதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைப் பார்க்க வேண்டும் என்றும் , தனது இறுதிக்கிரியைகளை தனது மகனான இராமச்சந்திரனே முன்னின்று நடத்தவேண்டுமெனவும் அவர் பல தடவை பேசியிருக்கின்றார். தனது மகனிற்கான சேமிப்பை தனது மரணத்தின் முன்னராக அவரிடம் கையளிக்க வேண்டுமென்ற அவரது கனவு கடைசிவரை மெய்க்காது போயேவிட்டது.

தமிழர் மக்களது துன்பியல் வாழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற போதே இந்த உலகை விட்டு பிரிந்துவிடுவது தொடர்கின்றது.அதனுள் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமசந்திரனின் தந்தையார் சுப்பிரமணியத்தின் மரணமும் அமைந்திருக்கின்றது.

யாழ்.தினக்குரல்,வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் அற்றேயுள்ளது. ஆசிரியராக பணியாற்றியதுடன் 5 வருடங்கள் ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த நிலையில் 16.02.2007 அன்று இரவு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் நெருங்கும் நிலையில் இராமச்சந்திரன் கடத்தப்பட்ட தொடர்பில் விசாரணை எவையும் மேற்கொள்ளவில்லை என்பது ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.

கரவெட்டி அரசடியில் தனியார் கல்வி நிலையம்  ஒன்றையும் நடத்தி வந்தார். இங்கு அன்றிரவும் கற்பித்தலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவரைக் காணவில்லை என்று உறவினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது தான் பொலிஸார் இது சம்பந்தமாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் ஈ.பி.டி.பி செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தி செல்லப்பட்டார். அவரின் கடத்தலுக்கு இராணுவமும் ஈ.பி.டி.பியும் பதில் சொல்ல வேண்டும் என சுயாதீன சிங்கள ஊடகவியலாளர் ப்ரெட்டி கமகே ஐ.நா.மனித உரிமை பேரவையில் அன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி உப கூட்டம் ஒன்றை இமெடா சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் ஊடகவியலாளர் ப்ரெட்டி கமகே, திருமதி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களில் 42 ஊடகவியலாளர்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களாகும். அதேபோன்று வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரதான கூட்டங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் சார்பில் இரு நிமிடம் உரையாற்றும் தமிழர் தரப்பினரோ அல்லது பக்க அறைகளில் கூட்டங்களை நடத்தும் தமிழ் அமைப்புக்களோ படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி பேசியது கிடையாது. அன்று ஊடகவியலாளர் கமகே படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து சில நாட்களின் பின்  இராமச்சந்திரனின் வீட்டிற்கு இராணுவத்தினரும் பொலிஸாருமாக சுமார் 6பேர் சென்று இராமச்சந்திரனின் கல்விச்சான்றிதழ் உட்பட ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து சென்றதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

சர்வதேச ஊடக கண்காணிப்புக் குழுக்கள் தமது மகனை கைவிட்டு விட்டதாகவும், தன்னுடைய மகன் குறித்து உள்நாட்டு விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என இராமசந்திரனின் தந்தை குற்றம் சுமத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இன்று தீர்வின்றி இராமச்சந்திரனின் தந்தை இந்த உலகைவிட்டு சென்றுவிட்டார். இராமச்சந்திரனின் கடத்தல் தொடர்பாக இனிமேல் எவர் விசாரணையை கையில் எடுக்கவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட காரணமாக இருந்தவர்களே இன்று ஆட்சி பீடத்தில் இருக்கும் போது இராமச்சந்திரனின் நீதி மறுக்கப்படும். கொலைகள் களவுகளில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்தியதற்காக இராமச்சந்திரனை கடத்தினர். இவர்கள் தான் இன்று தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றனராம?;. 

துன்னாலைச் செல்வம்ஆசிரியர் - Sellakumar