நாடாளுமன்றத்தில் இன்று கவிழ்ந்தது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் இன்று கவிழ்ந்தது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் இன்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.

இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியால் புதிய பிரதமருக்கும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது மஹிந்த அணியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க சபாநாயகரின் அனுமதியுடன் குரல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மஹிந்த அணியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட குரல் மூல வாக்கெடுப்பில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர், நாளை வரை சபை அமர்வை ஒத்திவைத்தார்.

 

ஆசிரியர் - Shabesh