சபைக்குள் நடந்தது என்ன? விசேட தொகுப்பு!

சபைக்குள் நடந்தது என்ன? விசேட தொகுப்பு!
கறுப்பு பட்டியுடன் களமிறங்கிய ஐ.தே.க….
வாக்கெடுப்பை தடுக்க சபாபீடம் முற்றுகை…
முன்கூட்டியே வெளியேறிய மஹிந்த – இறுதிவரை களத்தில் நின்ற ரணில்
‘செல்பி’ மழையில் நனைந்து மகிழ்ந்த எம்.பிக்கள்
சபைக்கு நடவே திரண்டு வெற்றிக்கொண்டாட்டம்
 
 
சபைக்குள் நடந்தது என்ன?
 
 
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், புதிய அரசுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், சபைக்குள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
வாக்கெடுப்பை தடுப்பதற்காக மைத்திரி, மஹிந்த கூட்டணி, சபாபீடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலும், தனது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக நின்றார் சபாநாயகர்.
 
கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் குரல்பதிவு வாக்கெடுப்பை நடத்தினார். இதனால், தோல்வியுடன் திரும்பவேண்டிய நிலை மஹிந்தவின் சகாக்களுக்கு ஏற்பட்டது.
 
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ஆளுங்கட்சி பக்கத்திலுள்ள ஆசனங்கள் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமருக்குரிய ஆசனத்தில் மஹிந்தவே அமர்ந்திருந்தார்.
 
கறுப்பு பட்டியுடன்
களமிறங்கிய ஐ.தே.க.
 
எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எம்.பிக்கள் கழுத்தில் கறுப்புபட்டி அணிந்தே வந்திருந்தனர்.
 
‘ஜனநாயகத்திற்காக…’ என்றும், ஆளுங்கட்சியில் இருந்தபோது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தின் இலக்கமும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது.
 
சபாபீடத்தை முற்றுகையிட்டு சபைநடவடிக்கையை குழப்புவதற்கு மஹிந்த, மைத்திரி அணிகள் முயற்சித்தாலும், ஐக்கிய தேசிய முன்னணியின் எம்.பிக்களும் இறுதிவரை எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை.
 
மஹிந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றும் சபாநாயகரால் அறிவிக்கப்படும்வரை ஆசனங்களிலிருந்து எழுந்துநின்று ஜனநாயகத்துக்காக குரல்எழுப்பினர்.
 
சபாநாயகரின் அறிவிப்பு வெளியான கையோடு அவைக்குள் நடுவில் இறங்கிய ஐ.தே.க. இளம் எம்.பிக்கள் வெற்றிக்கோஷம் எழுப்பினர். அதன்பின்னர் ஏனைய எம்.பிக்களும் அங்கு திரண்டனர். பெண் எம்.பிக்களும் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
சபைக்குள் நடப்பவற்றை சில எம்.பிக்கள் விடியோ எடுத்ததுடன், படங்களாகவும் எடுத்துவைத்துக்கொண்டனர்.
 
நண்பேண்டா….!
 
பலப்பரீட்சையில் மஹிந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் அக்கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுடன் சபைக்குள் நட்புறவுடன் கலந்துரையாடினர். சிலர் கட்டித்தழுவிக்கொண்டனர்.
 
விஜித் விஜயமுனி சொய்சாவை தமது பக்கம்வருமாறு ஐ.தே.க. எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துடன், அவர் கழுத்திலும் கறுப்புபட்டிமாட்டி அவைக்கு நடுவே தூக்கிவந்தனர்.
 
சிரித்தபடியே ஐ.தே.கவின் நடவடிக்கைக்கு சைகைமூலம் எதிர்ப்பைக்காட்டிய விஜயமுனி சொய்சா, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என குறிப்பிட்டார்.
 
மைத்திரியின் சகாக்கள்
ரணிலுடன் சங்கமம்
 
அரசமைப்புக்கு முரணான வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் செயலைக் கண்டித்தும், சுதந்திரக்கட்சியின் எதிர்காலத்தைக்கருத்திற்கொண்டும் தாம் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவதாக சு.கவின் மூத்த உறுப்பினர்களான பௌசி, பியசேன கமகே ஆகியோர் இன்று அறிவித்தனர்.
 
அத்துடன், நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்களை ஆதரிக்கப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். பௌசிக்கு கௌரவமளிக்கும் வகையில் எதிரணியில் அவருக்கு முன்வரிசையை ஐ.தே.கவினர் வழங்கினர். மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த வசந்தனேநாயக்கவும், ரணிலுக்கு இறுதிநேரத்தில் நேசக்கரம் நீட்டினார்.
 
முன்கூட்டியே வெளியேறிய மஹிந்த
இறுதிவரை களத்தில் நின்ற ரணில்
 
நாடாளுமன்றத்தில் தமக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை அறிந்தபின்னர், பிரதமர் ஆசனத்தில் இருந்து எழுந்து, சபாநாயகரின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே சபையிலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.
 
அவரை கௌரவமான முறையில் வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் அவரின் சகாக்கள் குறியாக நின்றனர்.இருந்தாலும் மஹிந்த வெளியேறும்போது ஐ.தே.க. எம்.பிக்கள் அவருக்கு எதிராக கோஷம்எழுப்பினர்.
 
வழமையாக சபைக்கு வந்ததும், தமக்குரிய பணி முடிவடைந்தபின்னர் உடனேயே வெளியேறிவிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இறுதிவரை களத்தில் நின்றார். கட்சி எம்.பிக்களுடன் மனம்விட்டு பேசுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
 
சபைக்கு நடுவேவந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தமது எம்.பிக்களை, நாடாளுமன்ற குழுஅறைக்கு அழைத்துசெல்லும்வரை அவர்களுடனேயே ரணில் இருந்தார்.
 
அதேவேளை, எஸ்.பி. திஸாநாயக்க சபையைவிட்டு வெளியேறுகையில் அவருக்கு எதிராக ஐ.தே.க. எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.
ஆசிரியர் - Shabesh