கஜா புயல் தொடர்பில் பிந்திய தகவல் வெளியாகியது - வடக்கில் கன மழைக்கு வாய்ப்பு

கஜா புயல் தொடர்பில் பிந்திய தகவல் வெளியாகியது - வடக்கில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல் தமிழகத்தைக் கடக்க உள்ளதால் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அதன் தாக்கம் காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

“இன்று பின்னிரவு 11 மணி தொடக்கம் நாளைக் காலை ஒரு மணிவரையான காலப்பகுதியில் கஜா புயல் இலங்கையின் வடக்கு காங்கேசன்துறை கடற்பரப்புக்கு அண்மையாக கடந்து செல்லும்.அதனால் பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மழை நாளை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கலாம்

கஜா புயல் கரையைக் கடக்கும் முன்பு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டதைப் போல அல்லாமல் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது” என்றும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கஜா புயல் குறித்து சிறப்புப் பதிவு ஒன்றை தனது தமிழ்நாடு வெதர்மான் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

தீவிரப் புயலாக மாறியுள்ள கஜா புயல் எதிர்பார்த்தது போல கரையைக் கடக்கும் முன்பு வலுவிழக்க வாய்ப்பு குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இன்று இரவு அல்லது நள்ளிரவில் தமிழகம் கடலூர் – வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இது வர்தா புயலுக்கு ஒப்பாக இருக்கலாம். தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினத்துக்கு அதி தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அருகில் உள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் விரிவடையும்.

புயல் கரையைக் கடக்கும் போது நாகப்பட்டினத்தில் மணிக்கு 100 – 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும். புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் தீவிரமடைந்து பிறகு கரையைக் கடக்கும் முன்பு பலவீனமடையும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், அப்படி கரையை கடக்கும் முன்பே பலவீனமடைய வாய்ப்பு குறைந்துள்ளது. தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் இருந்து தற்போது 150 – 175 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. மணிக்கு 25- 30 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்கிறது. இது தமிழகக் கடற்கரையை அடைய 6 மணி நேரம் ஆகலாம். இது இன்று இரவு அல்லது நள்ளிரவில் கரையைக் கடக்கலாம் என்றும், புயல் சின்னம் முழுவதும் கரையைக் கடக்க 4 மணி நேரம் கூட ஆகலாம் என்பதால், நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் நிகழ்வானது தொடரலாம் என்று பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II