சபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்

சபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்

சபாநாயகர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு மாறுபட்டவகையில் செயற்படுவதே தற்போதைய பாராளுமன்ற நடவடிக்கை சீர்குலைவிற்கு காரணம் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வு நேற்றும் இன்றும் உரியவகையில் நடைபெறவில்லை. இதற்கு காரணம் சபாநாயகர் நடவடிக்கை ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இன்று 11.30க்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் நான் கலந்துகொண்டேன். ஜனாதிபதி நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின்போது நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்னெடுப்பது தொடர்பிலான விடயங்களை ஒத்துக்கொண்டார். அதனை இந்த கட்சித்தலைவர்கள் பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டினேன். ஆனால் இதற்கு மாறுபட்டவகையில் இன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் உரையாற்றினார். அவர் இந்த நாட்டில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் . பிரதமராகவும் பணியாற்றியுள்ளார். அவரது உரையின் போது அவரை சபாநாயகர் விழிக்கும்போது உரிய மரியாதையில் விழிக்கவில்லை. சாதாரண உறுப்பினர் போலவே அவரை குறிப்பிட்டார். இவ்வாறான ஒரு நிலையை பிரதமர் சார்ந்த கட்சி உறுப்பினர்கள் எந்தவகையில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதிக்கே பிரதமரை நியமனம் செய்யும் உரிமை உண்டு. இந்த விடயம் அரசியல் யாப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பிரதமரை இவர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவேண்டுமாயின் 5 தினங்களுக்கு முன்னர் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறவேண்டும்.

பிரேரணை குறித்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக அது கையளிக்கப்படவேண்டும். அதன்பின்னரே அது தொடர்பான வாக்களிப்பு இடம்பெறவேண்டும் என்று பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் தயசிறி ஜயசேகர குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தமுடியாது என்று குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் பாராளுமன்றத்திற்குள் பொலிஸை வரவழைத்து அவர் இஷ்டப்படி செயற்பட்டுள்ளார்.

சட்டவாட்சி தொடர்பில் பொறுப்புடன் செயற்படும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு . ஆனால் அந்த பொறுப்புடன் அவர் செயற்படுவதாக தெரியவில்லை. இன்றைய பிரச்சனைக்கு காரணம் சபாநாயகரின் பொறுப்பற்ற செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா கருத்துதெரிவிக்கையில், 
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவேண்டுமாயின் அது தொடர்பில் உள்ள விதிமுறைகளை சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர் - Editor II