மருத்துவரின் அஜாக்கிரதை: குளிர் ஜுரத்திற்கு சிகிச்சை எடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை

மருத்துவரின் அஜாக்கிரதை: குளிர் ஜுரத்திற்கு சிகிச்சை எடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை

சுவிட்சர்லாந்தின் ஆர்காயூ மண்டலத்தில் மருத்துவரின் அஜாக்கிரதையால் 52 வயது பெண்மணி மரணமடைந்துள்ள சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

ஆர்காயூ மண்டலத்தில் குடும்பத்துடன் குடியிருப்பவர் குறித்த 52 வயது பெண்மணி. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் சாதாரண குளிர் மற்றும் காய்ச்சல் காரணமாக தங்களது குடும்ப மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார்.

வழக்கமான சோதனைகளுக்கு பின்னர் அந்த மருத்துவர் சில மருந்து மாத்திரைகளை குறிப்பெழுதி வழங்கியுள்ளார். அதில் ஆண்டிபயாடிக் செஃபோரோக்ஸைம் மருந்தும் இருந்துள்ளது.


மருத்துவரின் குறிப்பை எடுத்துக் கொண்டு மருந்தகம் சென்ற அவர் அங்கிருந்து மருந்துகளை பெற்றுக்கொண்டு குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

பின்னர் மாத்திரைகளை உட்கொண்ட அவருக்கு சிறிது நேரத்திலேயே கடும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

மிகுந்த சிரமப்பட்ட அவர் திடீரென்று கோமாவில் விழுந்துள்ளார். இச்சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த மருத்துவர் மீதும் மருந்தக ஊழியர் மீதும் பாதிக்கப்பட்ட குடும்பம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

மருத்துவரின் அஜாக்கிரதை காரணமாகவே குறித்த பெண்மணி மரணமடைந்துள்ளதாகவும், நோயாளி மீது அந்த மருத்துவர் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விவகாரத்தில் மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணமா எனவும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் - Editor II