1000

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை

தொழிலில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் மனம் உடைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


துபாய்:

இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு நாடான ரஸ் அல் கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார்.

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். 

கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த இவர், தொடர்ந்து ரத்ததான முகாம்களையும் நடத்தியுள்ளார். இதற்காக அந்நாட்டு அரசிடம் மனிதநேய உதவியாளர் என்ற சான்றிதழையும் சந்தீப் பெற்றுள்ளார்.

இங்குள்ள யுலான் கலா சாஹித்தி அமைப்பின் பொதுச்செயலாளராகவும், நண்பர்கள் கிரிக்கெட் குழுவின் அணி தலைவராகவும் இருந்துவந்த இவர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தாரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, இரு நண்பர்களுடன் ரஸ் அல் கைமா நகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய சந்தீப்பின் நண்பர்கள் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

வீட்டின் ஒரு அறைக்குள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சந்தீப் வெள்ளலூர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தற்போது இபுராஹிம் பிம் ஒபைதுல்லா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சந்தீப்பின் பிரேதத்தை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சொந்தமாக போக்குவரத்து நிறுவனம் தொடங்கிய சந்தீப், இதில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் கடும் துயரத்துக்குள்ளாகி இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. 
ஆசிரியர் - Editor II