1000

சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சென்னை:

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியாமல் போனது.

இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மறு குற்றச்சாட்டு பதிவுசெய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது, 

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் 4 மாதங்களில் சசிகலா, பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை முடிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


ஆசிரியர் - Editor II