1000

நடிகர் விஷால் கைது

நடிகர் விஷால் கைது
சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு எதிர்தரப்பினர் போட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்த நடிகர் விஷால் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அழகப்பன், பாரதிராஜா, ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் அடங்கிய அணியினர், விஷால் சங்கத்திற்கான நிதியை கையாடல் செய்துவிட்டார் என குற்றஞ்சாட்டியுள்ளனர். அதோடு இந்த எதிர் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் சங்க அலுவலகத்திற்கு நேற்று பூட்டு போட்டனர். ஆனால் சங்க நிதி தொடர்பான கணக்கு பொதுக்குழுவிடம் காட்டப்படும் என்று விஷால் நேற்று தெரிவித்திருந்தார்.
இன்று காலை தன்னுடைய சங்க அலுவகத்திற்கு போட்டிருந்த பூட்டை உடைக்க விஷால் வருவார் என அவரின் ஆதரவாளர் பிரவீன் காந்த் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதேபோல பூட்டை உடைக்க விஷால் முயற்சித்தபோது, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

நடிகர் விஷால் கைது

கைதான நேரத்தில் ஊடகங்களிடம் பேசிய விஷால் தனது சங்கத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டிருக்கிறார்கள் என்று கூறினார். ''என் அலுவலகத்திற்கு நான் செல்ல காவல்துறையினர் என்னை அனுமதிக்கவில்லை. யாரோ போட்டிருக்கும் பூட்டிற்கு காவல் காக்கிறார்கள். இதை கேள்வி கேட்டதற்காக என்னை கைதுசெய்துள்ளார்கள். திருட்டு பூட்டுக்கு காவல்துறையினர் காவல் காக்கின்றனர்,'' என அதிர்ச்சியுடன் பேசினார்.
  • விஷால் கட்டளையிடுவது நியாயமல்ல: திரையரங்க உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் காந்த், “இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் பெறப்படும் நிதியை சிறுதயாரிப்பாளர்களின் நலனுக்காக செலவு செய்ய விஷால் தரப்பினர் முடிவு செய்திருந்தனர்.
அந்த நிதியில் யாருக்கு எவ்வளவு அளிக்கப்படும் என்பதை வெளியிடவேண்டும் என எதிர் தரப்பினர் கேட்டனர். சிறுதயாரிப்பாளர்களின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு, பொதுக்குழுவில் அந்த விவரம் தெரிவிக்கப்படும் என்று விஷால் சொன்னதை ஏற்காமல் பூட்டு போட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

நடிகர் விஷால் கைது

இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த விவகாரத்திற்கு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி தயாரிப்பாளர்கள் இடையில் அரசு சமரசம் செய்துவைத்தது என்றும் கூறினார்.
தற்போது பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பினர் போட்ட பூட்டை திறந்துள்னர்.
விஷாலின் எதிர் தரப்பினர் சங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அரசு இதில் தலையிடவேண்டும் என்றும் கூறி முதல்வர் பழனிசாமியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஆசிரியர் - Editor II