1000

வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் - வங்கிகள் முடங்கும் அபாயம்

வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் - வங்கிகள் முடங்கும் அபாயம்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


சென்னை:

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.

22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. 26-ந் தேதி புதன்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. 
ஆசிரியர் - Editor II