1000

மஹிந்த ரணில் -எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.

மஹிந்த ரணில் -எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்குப் பின்னர் ஆட்சி செய்தவர்கள் வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல தெற்கு மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லையென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனாலேயே வடக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் தெற்கே விசேட தேவையுடைய இராணுவத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி. கட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்இ 'நாட்டை ஆண்டு வரும் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் மதவாதத்தையும் இனவாதத்தையும் வளர்த்து வருகின்றனர்.
போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலமாகியும் இந்த நாட்டினைக் கட்டியெழுப்ப முடியவில்லை. இதற்கு காரணம் ஊழல். மஹிந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி அரசு காப்பாற்றும். ரணில் ஆட்சியில் ஊழல் நடந்தால் மஹிந்த அரசு ரணிலை காப்பாற்றும். இவ்வாறு ஊழல்வாதிகளே நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர்.
தற்போதைய அரசுஇ மஹிந்த காலத்தில் நடைபெற்ற ஊழல் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அது வெறும் கண்துடைப்பு மட்டுமே. மஹிந்த காலத்து ஊழல்களுக்கு போதிய ஆதாரங்கள் ரணிலிடம் இருந்தும் அவர்கள் மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர்.
வடக்கில் போரின்போது காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவினர்கள் போராடி வருகின்றனர். அதேபோல தென்னிலங்கையில் போரில் ஈடுபட்டு அங்கவீனம் ஆக்கப்பட்ட இராணுவத்தினர் ஓய்வூதியம் கேட்டு போராடி வருகின்றனர்.
அந்தவகையில் போரின் பின்னர் ஆட்சி நடத்திய ஆட்சியாளர்கள் வடக்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை. தெற்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை. மாறாக ஊழல்களைதான் செய்தது. இவ்வாறானவர்கள் அரசியலில் இருப்பதற்கு வெட்கித் தலை குனிய வேண்டும். மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டும்' என மேலும் தெரிவித்தார்.


ஆசிரியர் - Editor II