இன்று இறுதி மோதல்!

இன்று இறுதி மோதல்!
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 'ருவென்டி 20' போட்டி இன்று லாகூர் கடாபி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தத் தொடரை ஏற்கனவே இலங்கை அணி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில்இ வெள்ளையடிப்பை (WHITE WASH) தவிர்க்க பாகிஸ்தான் இன்றைய போட்டியில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் சொந்த மண்ணில் 'ருவென்டி 20' தொடரை இழந்துள்ளது.
இலங்கையின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்காத இந்தச் சுற்றுத் தொடரில் இலங்கையின் இளம் வீரர்கள் சிறப்பாக தங்கள் பெறுபேறுகளை வழங்கி அணியை வெற்றி நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த பல வருடங்களாக தேசிய அணிக்குள் நுழைவதற்கு போராடி வந்த பானுக ராஜபக்ஷஇ முதல் இரண்டு 'ருவென்டி 20' போட்டிகளையும் இலங்கை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
அதுமட்டுமல்லாது உலகக் கிண்ணத் தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவும் இந்த தொடரில் சிறப்பாக பிரகாசித்துள்ளார்.
மறுபுறத்தே இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களும் தம் பங்கிற்கு சிறப்பாக செயற்பட்டுஇ பாகிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டம்காணச் செய்துள்ளார்கள்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட உமர் அக்மல் இரண்டு போட்டியிலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான அஹமட் ஷெசாட் பெரிதாக சோபிக்கவில்லை.
பெரிதும் பிரகாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் கூட ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சொற்ப ஓட்டங்களுள் ஆட்டமிழந்தார். எனவேஇ தமது துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தினால் மாத்திரமே இன்றைய மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று வெள்ளையடிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் கடைசி மூன்று 'ருவென்டி 20' போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. மறுபுறத்தே இலங்கை அணி கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் மண்ணில் வெள்ளையடிப்பு சாதனை நிகழ்த்த தசுன் ஷானக தலைமையிலான இளம் இலங்கை வீரர்கள் காத்திருக்கின்றார்கள்.
முதல் இரண்டு போட்டிகள் இடம்பெற்ற லாகூர் மைதானத்திலேயே மூன்றாவது போட்டியும் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II