1000

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் ஒரு பக்க தகவல்தான்: வரதராஜ பெருமாள்!..

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் ஒரு பக்க தகவல்தான்: வரதராஜ பெருமாள்!..
சுவிஸ் தூதரகத்தை சேர்ந்த ஒருவரை விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்டதில், இன்றும் தெளிவான பொலிஸ், புலனாய்வு அறிக்கைகள் வரவில்லை. அது ஒரு பக்கத்தில் சொல்லப்படும் விடயமாக இருக்கிறது. சரியான முறையில் விசாரணை நடத்தும்போதுதான் அதன் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ஆகியோர் தற்போது ஆட்சியிலுள்ள கட்சியை ஆதரித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளிற்கு மேலாக நல்லுறவை பேணி வருகிறார்கள். ஆட்சியில் பங்காளர்களாகவும் இருந்தார்கள்.
தமிழர சமூக ஜனநாயக கட்சியாகிய நாங்கள் 3 மாதங்களாகத்தான் இந்த ஆட்சியை ஆதரித்து வருகிறோம். டக்ளஸ், அங்கஜன் ஆட்களும் நாமும் சம பங்காளர்கள் இல்லை.
 
நாட்டில் ஆட்சிமாற்றம் தேவையென்றுதான் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்தோம். தமிழ் மக்களின் வாக்குகளின் ஊடான பங்கும் அதிலிருக்க வேண்டுமென்றுதான் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். எந்தவொரு பதவியையும் எதிர்பார்த்து ஆதரிக்கவில்லை.
தமிழர் சமூக ஜனநாயக கட்சியும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. இந்த கட்சியின் விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சி, கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மக்கள் மத்தியில் தேர்தல் வேலைத்திட்டங்கள் ஊடாக பாய்ச்சல் மேற்கொண்டுள்ளோம். அதுதான் எங்கள் இலக்காக இருந்தது. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு, கட்சியை மேலும் மக்கள் மயப்படுத்துவதே எங்கள் பிரதான இலக்காக அமையும்.


 
கோட்டாபயவிற்கு வடக்கு, கிழக்கில் பெருமளவு வாக்களிக்கவில்லை. இதனால், அவரிடம் எதையும் கேட்கலாமோ தெரியவில்லை. எனினும், அவர் அனைத்து மக்களிற்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என பெருந்தன்மையாக கூறியிருக்கிறார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போதும், விக்னேஸ்வரன், சுரேஷ், கஜேந்திரன் ஆகியோர் கூட்டணி அமைத்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் அந்த கூட்டணி வெற்றியடையவில்லையென்றதும், ஒற்றுமையை கைவிட்டு போனார். ஜனாதிபதி தேர்தலில் பல்கலைகழக மாணவர்களை வைத்து 5 கட்சி கூட்டணியை உருவாக்க முயன்றார்கள். பின்னர் அதையும் நடுவீதியில் போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

இப்பொழுது விக்னேஸ்வரன், சுரேஷ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் போன்றவர்கள் ஒரு கூட்டை உருவாக்கினால், சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்., மறுபக்கம் தேசிய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, பிள்ளையான், சிறிரெலோ, பிரபா கணேசன் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படும்போது, 3 கட்சிகளின் கூட்டான தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களில் சிறுபான்மை ஆதரவை பெற்ற கட்சியாகும். அந்த கட்சியை தொடர்ந்தும் அதே நிலையில் தக்க வைக்க வேண்டுமென்பதற்காக சுமந்திரன் ஒற்றுமை அழைப்பை விடுக்கிறார். சுமந்திரன் அந்த கட்சியின் தலைவர் அல்ல. சம்பந்தனிடமிருந்தோ, சேனாதிராசாவிடமிருந்தோ இந்த கோரிக்கை வெளிப்படவில்லை.

எந்தெந்த கட்சிகளை குறித்து ஒற்றுமை கோரிக்கை விடுத்துள்ளார் என்பது தெளிவில்லை. அது ஒரு விளக்கமில்லாத அறிவிப்பு.

சுவிஸ் தூதரகத்தை சேர்ந்த ஒருவரை விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்டதில், இன்றும் தெளிவான பொலிஸ், புலனாய்வு அறிக்கைகள் வரவில்லை. அது ஒரு பக்கத்தில் சொல்லப்படும் விடயமாக இருக்கிறது. சரியான முறையில் விசாரணை நடத்தும்போதுதான் அதன் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளலாம்“ என்றார்.
ஆசிரியர் - Shabesh