1000

இராணுவனரால் வயல் நிலமிருந்தும் அரிசியை விலைகொடுத்தே வாங்கும் அவலம்..

இராணுவனரால் வயல் நிலமிருந்தும் அரிசியை விலைகொடுத்தே வாங்கும் அவலம்..
முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டியில் வசிக்கும. மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய நடவடிக்கைக்குரிய குளத்தில் நீர் தேக்க இராணுவத்தினர் அனுமதிக்காதமையினால் வயல் நிலமிருந்தும் உணவிற்கான அரிசியை விலைகொடுத்தே வாங்கும் அவலம் நிலவுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முறிகண்டி விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில் ,

முறிகண்டிப் பகுதியில் ஏ 9 வீதியோரம் நிலைகொண்டுள்ள படையினர் தமது படை நிலைகளிற்கும் அப்பால் பெரும் நிலப்பரப்பினையும் சேர்ந்தே அபகரித்து பாதுகாப்பு வேலி அமைத்து பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இப் பகுதிக்குள் இரு குளங்கள் உள்ளன அதில் ஓர் குளம் படையினரின் வலயத்தின் நடுவே அமைத்துள்ளபோதும் ஓர் குளம் வீதியோரமே அமைந்துள்ளது.

இவ்வாறு அமைந்துள்ள குளத்தில் நீர் தேக்கப்படுமானால் அதன் அருகே கானப்படும் 80 ஏக்கர். வயல் நிலங்களும் விவசாயம் மேற்கொள்ள முடியும். இருப்பினும் வனப்பகுதியில் உள்ள படை முகாமிற்குச் செல்லும் பாதை குளத்தின் அருகே இருப்பதனால் இக் குளத்தில் நீர் தேக்கப்படுமானால் படையினரின் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்று நீரில் மூழ்கும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாக குளத்தின் அணைக்கட்டின் நடுவே உடைக்கப்பட்ட நிலையிலேயே கானப்படுகின்றது. அதனைத் திருத்தி குளத்தினில் நீரைத் தேக்கி விவசாயம் மேற்கொள்ள படையினர் தடையாகவே இருக்கின்றனர். இதன் காரணத்தினால் விவசாயிகளான எமது வாழ்வாதாரம் பெரும் அவலத்தின் மத்தியிலேயே கானப்படுகின்றது . இக் குளத்தின் அருகே விவசாயிகளினால் அமைக்கப்பட்ட ஓர் மிகப் பெரும் கிணறு உள்ளது . அந்தக் கிணற்றையும் ஆக்கிரமித்துள்ள படையினர் விவசாயிகளை பயன்படுத்தவும் அனுமதிப்பதும் கிடையாது.

இருப்பினும் குறித்த கிணற்றில் 3 நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வனப்பகுதியில் படையினர் மேற்கொள்ளும் பயிர்ச் செய்கைக்கு இரவு பகலாக நீர் இறைக்கப்படுகின்றது. இவ்வாறு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் படையினர் தமது சம்பளத்திற்கும் மேலான வருமானத்திற்காக எமது நீரையும் பயன்படுத்தி குளத்தினையும் உடைத்துள்ளனர். இதேநேரம் இக் குளத்தினை படையினர் விடுவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். என பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பயன் ஏதும் கிடைக்கவில்லை. எனவும் கவலை தெரிவிக்கின்றனர். -
ஆசிரியர் - Shabesh