1000

கருணைக்கொலை செய்துவிடுங்கள்: கெஞ்சும் சுவிட்சர்லாந்தின் கொடூர குற்றவாளி

கருணைக்கொலை செய்துவிடுங்கள்: கெஞ்சும் சுவிட்சர்லாந்தின் கொடூர குற்றவாளி

சுவிட்சர்லாந்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்யுமாறு கெஞ்சியுள்ளார்.

சுவிஸில் சிறார்கள் மற்றும் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள 69 வயதான பீற்றர் வோக்ட்,

தாம் கடுமையான சிறுநீரகம் மற்றும் இதய கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள போஸ்டடெல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர் இன்னும் ஆபத்தானவராகவே கருதப்படுகிறார்.

பல ஆண்டுகளாக சிகிச்சையளித்த போதிலும் வோக்ட் சமுதாயத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருப்பதாக அதிகாரிகள் பலமுறை தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே சிறைக்குள் நரக வலி அனுபவிப்பதைவிடவும் சாவதே மேல் என வோக்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த ஜூலை 2018 இல், வோக்ட் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கருணைக்கொலைக்கு ஆதரவளிக்கும் எக்ஸிட் சுவிட்சர்லாந்தை தொடர்பு கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தாராளமய கருணைக்கொலைச் சட்டங்களிலிருந்தும் பயனடைவதில் தவறில்லை என்று அவர் வாதிட்டுள்ளார்.

கடந்த அக்டோபரில், வல்லுநர்கள் குழு ஒன்று சில நிபந்தனைகளின் கீழ் கைதிகளுக்கு கருணைக்கொலை உரிமைகள் பொருந்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்,

மேலும் உளவியல் தொடர்பான நோய் ஏற்பட்டால் இரண்டு சுயாதீன நிபுணர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

சிறைச்சாலையின் நரக வாழ்க்கை, நோய்வாய்ப்பட்ட தாயாரை பார்க்க முடியாத சூழல் என தம்மை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அம்சங்கள் சூழ்ந்துள்ளதாக கூறும் வோக்ட்,

தமது 70-வது வயதில் எதிர்வரும் ஆகஸ்டு 13 ஆம் திகதி வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தங்களுக்கான வசதியை மேம்படுத்திக் கொள்ள தந்திரமாக குற்றவாளிகளால் கருணைக்கொலை கோரிக்கைகள் பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor