1000

மனோ கணேசனின் மாற்று யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்

மனோ கணேசனின் மாற்று யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் முடிவில் இரா.சம்பந்தன் மிகமிக உறுதியாக இருக்கிறார். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடாமலிருப்பதால், தேசியப்பட்டியல் ஆசனத்தை உறுதி செய்வதற்காக கொழும்பில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரை களமிறக்கியே தீர வேண்டுமென அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இதனை தெரிவித்தார்.

கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடும் என முதலில் அறித்த எம்.ஏ.சுமந்திரன், தற்போது எழுந்துள்ள எதிர்ப்பலை காரணமாக அந்த நிலைப்பாட்டில் குழப்பமடைந்துள்ளார். எனினும், தனது நாடாளுமன்ற ஆசனத்தை நிச்சயம் செய்ய வேண்டுமென்பதில் இரா.சம்பந்தன் உறுதியாக உள்ளார்.

இதேவேளை, மனோ கணேசன் தரப்பிலிருந்த முன்வைக்கப்பட்ட மாற்று யோசனையையும் இரா.சம்பந்தன் நிராகரித்ததை அறிந்தது.

கூட்டமைப்பு கொழும்பில் வேட்பாளரை களமிறக்காமல், மாற்று யோசனையொன்றை மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

மனோ கணேசனின் கூட்டணி சார்பில் கொழும்பில் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதெனவும், வன்னியில் மனோ கணேசனின் வேட்பாளர் ஒருவர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்குவதென்றும் யோசனையை மனோ கணேசன் முன்வைத்திருந்தார். எனினும், இரா.சம்பந்தன் அதை நிராகரித்துள்ளார்.

"மனோ கணேசன் ஐ.தே.முன்னணியில் போட்டியிடுவார், கொழும்பில் நாம் வேட்பாளரை இறக்குவதே, தேசியப்பட்டியல் ஆசனத்தை உறுதி செய்யவே. ஐ.தே.முன்னணி சார்பில் நமது வேட்பாளர் களமிறங்கினால் நமக்கு விருப்பு வாக்கு கிடைக்காது. நான் இம்முறை தேர்தலில் போட்டியிடாத நிலையில், தேசியப்பட்டியல் ஆசனமொன்றை நிச்சயப்படுத்த வேண்டுமல்லவா?" என இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, இன்றைய சந்திப்பில், கொழும்பில் வேட்பாளரை கட்டாயம் களமிறக்க வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தவில்லை.

"பலரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். கொழும்பில் எமது வெற்றி நிச்சயமற்றது, மனோ கணேசன் கடந்த தேர்தலில் மயிரிழையில் வென்றார். நாம் வேட்பாளரை களமிறக்கினால், இரண்டு தரப்பிலிருந்தும் தமிழ் பிரதிநிதித்துவங்களும் இல்லாமல் போகும் ஆபத்துள்ளது என்பதை பலர் சொல்கிறார்கள். ஒருவேளை நாமும் வேட்பாளரை களமிறக்கி, இரண்டு தரப்பு வேட்பாளர்களும் வெற்றியடையாத நிலைமை வந்தால், மக்கள் மத்தியில் நாம் செல்ல முடியாத நிலைமையேற்படும். எனினும், வடக்கு கிழக்கில் போட்டியிடப் போகிறேன் என இந்த விவகாரத்தை முதலில் ஆரம்பித்தவர் மனோ கணேசன்தான்" என்றார்.

தமிழ் அரசு கட்சியின் பட்டியலில், கே.வி.தவராசா இடம்பெற்றுள்ளார். அது தவிர, நல்லையா குமரகுருபரன் இடம்பெறும் வாய்ப்புள்ளது. அண்மையில் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து, கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் விருப்பத்தை அவர் தெரிவித்தார். இரா.சம்பந்தனும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார்.

மனோ கணேசனின் கட்சியிலிருந்து வெளியேறிய சண்.குகவரதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார். எனினும், அண்மையில் அவர் சில சர்ச்சைகளில் சிக்கியதால், அவருடனான பேச்சை தமிழ் அரசுக்கட்சி தொடரவில்லை .

இதுதவிர, இலங்கையின் முன்னணி காப்புறுதி

நிறுவனமொன்றின் உரிமையாளரும் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பில் களமிறக்கப்பட முயற்சிகள் நடந்து வருகிறது.ஆசிரியர் - Editor