புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 புதுச்சேரி சட்டமன்றத்தில், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக  ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும் கவலையில்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.  புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12 புதனன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (சிஏஏ) எதிராகவும் இதனை திரும்பப்பெறக்கோரும்  அரசின்  தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.  அதில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்  சட்டம் மக்கள் அனைவரிடமும் வேதனையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.  

இச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மை. அதை இச்சட்டம் சிதைக்கிறது.  மத அடிப்படையிலான பிரிவினையை எதிர்த்து தன் உயிரை தியாகம் செய்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டது நமது நாடு. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்பது அவரது எண்ணங்களுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எதிரானது.  தியாகத்துக்கு மிகப்பெரிய இழுக்கு.  இந்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் இடம் பெற வில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டத் தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றுகூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கமலகண்ணன், காங்கிரஸ் உறுப்பினர் கள் லட்சுமிநாராயணன், பாலன், திமுக உறுப்பினர்கள் சிவா, வெங்க டேசன், கீதாஆனந்தன் உள்ளிட்டோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இதனையடுத்து  முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம். அரசை கலைப்போம் என்றால் அதையும் செய்துகொள்ளுங்கள். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் முதலமைச்சர் நாராயணசாமி சவால்விடுத்தார்.

இதனையடுத்து பேசிய பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து,“ குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இதை செயல்படுத்தினால் வரலாற்று பிழை ஏற்படும் என்றும் கூறினார். பின்னர் தீர்மானம் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை தொடர்ந்து 6-வது மாநிலமாக புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ்,அதிமுக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்தனர். ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த  நியமன உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு  செய்தனர். நியமன உறுப்பினர்கள் என்பதால் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க 3 பேருக்கும் வாக்குரிமை கிடையாது.

எதையும் சந்திக்கத் தயார்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பிரச்சனைகளை பேசுவதற்குத்தான் சட்டமன்றம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்.ஆர். ரங்கசாமி சட்டமன்றத்திற்கு வந்து தனது கருத்தை பதிவு  செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றத்திற்கு வராமல், மக்கள் பிரச்சனைகளை பேசாமல் மக்கள் தங்களுக்கு ஓட்டுப் போட காத்திருப்ப தாக கூறுவது கேலிக்கூத்து.சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விஷயத்தில் என்ஆர் காங்கிரசின் நிலை என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்கத் தயார் என்று நாராயணசாமி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் - Editor