மனத்திருப்தி தான் முக்கியம்

மனத்திருப்தி தான் முக்கியம்

அண்மையில் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சிப் படங்களால் புது சர்ச்சை வெடித்துள்ளது. அதில் தனது பின்னழகைத் தாராளமாகக் காட்டியுள்ளார் ராஷ்மிகா. 

இதையடுத்து அவர் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு கவர்ச்சியாக காட்சி கொடுத்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதனால் எரிச்சலாகி விட்டாராம் ராஷ்மிகா.

“பணம்தான் முக்கியம் என்று நான் செயல்படுவதில்லை. அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் கூடுதலாக ஐந்து படங்களில் நடித்திருப்பேன். ஒரு நடிகைக்குப் பணத்தைவிட மனத்திருப்தி மிகவும் முக்கியம்,” என்கிறார் ராஷ்மிகா. 

அண்மையில்தான் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எனினும் ராஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்சினையும் எழுந்ததாகத் தெரியவில்லை. 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னைப் பற்றி வெளியிடும் பொய்யான தகவல்களால்தான் தனக்குப் பிரச்சினையும் மன வருத்தமும் ஏற்படுகிறது என்று புலம்புகிறாராம் ராஷ்மிகா.

இதற்கிடையே கன்னடப் படம் ஒன்றில் நடித்து முடித்திருப்பவர், தனது கதாபாத்திரத்துக்குப் பின்னணி குரல் கொடுக்க மறுப்பதாக மற்றொரு விவகாரம் தலைதூக்கியுள்ளது. 

‘பொகரு’ என்ற அந்தப் படத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தமானார் ராஷ்மிகா. துருவ் ஷார்ஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்டது. மற்ற அனைவரும் டப்பிங் பேசி முடித்துவிட்ட நிலையில் ராஷ்மிகா மட்டும் தனது வேலையை இன்னும் முடிக்கவில்லை. 

இதனால் பல மாதங்களாக அப்படக்குழுவினர் இவருக்காக காத்துக் கிடக்கிறார்களாம். பலமுறை டப்பிங் பேச தேதி கொடுத்துவிட்டு வராமல் இருந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

இதை ராஷ்மிகா மறுத்துவந்த நிலையில் நல்லவேளையாக அப்படத்தின் இயக்குநர் நந்தா கிஷோர் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். 

“ராஷ்மிகா ஏற்கெனவே இந்தப் படத்திற்கு பாதி டப்பிங் பேசிவிட்டார். தற்போது அவர் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால்தான் அவரால் பின்னணி குரல் கொடுக்க வரமுடியவில்லை. 

“எனவே, அவருக்காக சென்னை அல்லது ஹைதராபாத்தில் பின்னணிக் குரல் கொடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினோம். 

“ஆனால் எதற்காக வீண் செலவு செய்கிறீர்கள்? நான் பெங்களூரு வரும்போது எப்படியும் நேரம் ஒதுக்குகிறேன் என்றும் கூறியுள்ளார். அவர் பெங்களூரு வருவதற்காக காத்திருக்கிறோம்,” என்கிறார் நந்தா கிஷோர். 

எனினும் கடந்த பல  மாதங்களில் ராஷ்மிகா ஒருமுறை கூடவா தனது சொந்த ஊரான பெங்களூருக்குச் செல்ல முடியவில்லை? என்று திரையுலக விவரப் புள்ளிகள் சிலர் நமுட்டுச் சிரிப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆசிரியர் - Editor