சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ் கல்வி சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 24 ஆண்டாக நேற்று சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.

இத்தேர்வில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

தமிழ்மொழித்தேர்வுடன், சைவசமயம், றோமன், கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தேர்வு எழுதினர். பதினோராம் வகுப்பு தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.

தமிழ் கல்வி சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இத்தேர்வின்போது தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக கடமை புரிந்தனர்.

குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்து கொண்டனர். தமிழ் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழி கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளது.

இவ்வாண்டு பதினோராம் பன்னிரண்டாம்வகுப்பு தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் கல்விச்சேவை , அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்ட பின்படிப்புகளினையும் தமிழ்மொழி நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில் மேற்கொள்கின்றது.

இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் உதவிபுரிந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் தமிழ் கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.

தமிழ் ஆசிரியர்களின் தகைமையையும், கற்பித்தல் திறனையும் அதிகரிப்பதற்கும், தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியை கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் தமிழ் கல்வி சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஆசிரியர் - Editor