அவசர கூட்டத்தை புறந்தள்ளி பிரதமர் காதலியுடன் விடுமுறை சென்றது அம்பலம்

அவசர கூட்டத்தை புறந்தள்ளி பிரதமர் காதலியுடன் விடுமுறை சென்றது அம்பலம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவே கூட்டப்பட்ட 5 அவசர அமர்வுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் புறக்கணித்து, காதலியுடன் இரண்டு வார கால விடுமுறைக்கு சென்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 16,060 பேர் மரணமடைந்துள்ளனர்.

120,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் சீனாவில் பல ஆயிரம் பேரை பலி கொண்டு, உலகம் முழுக்க பரவத் தொடங்கிய காலத்தில்,

அது தொடர்பாக ஜனவரி 24-ல் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவை கூட்டத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த 4 கூட்டங்களையும் போரிஸ் புறக்கணித்தார் என தெரிவித்துள்ளது.

முதல் கூட்டத்தை புறக்கணித்த அன்று, சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் ஜான்சன் பங்கேற்றுள்ளார்.

ஆனால், பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.

கொரோனா பரவல் தொடர்பில் பிரித்தானிய விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளையே காது கொடுத்து கேட்கவில்லை என விமர்சித்துள்ள அந்த பத்திரிகை,

நடுவில் 2 வார காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கர்ப்பிணி காதலியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார்.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் 'பார்ட் டைம் பிரதமர்' என விமர்சித்தார். பிப்ரவரி 26-ம் திகதி, வல்லுநர் குழு அளித்த அறிக்கையில்,

காலதாமதமின்றி துரித நடவடிக்கை எடுத்து கொரோனாவை தடுக்கவில்லை எனில், 3.8 லட்சம் இறப்புகள் ஏற்படும் என எச்சரித்தது.

மட்டுமின்றி, உடனடியாக 4 வாரத்திற்கு ஊரடங்கை அமுல்படுத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் மார்ச் 2-ம் திகதி கொரோனா வைரஸ் தொடர்பான முதல் கூட்டத்தில் பிரதமர் போரிஸ் பங்கேற்றார்.

அப்போது பிரித்தானியாவில் மூன்று டஜன் நபர்களுக்கு கொரோனா பரவிவிட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் வேகமாக பரவி, உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட 6 நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா ஆகிவிட்டது என அதில் கூறிப்பிட்டுள்ளனர்.


ஆசிரியர் - Editor