1000

10 சதவிகித ஜிடிபி எல்லாமே ஏமாற்று; மோசடி!

10 சதவிகித ஜிடிபி எல்லாமே ஏமாற்று; மோசடி!

கொரோனா பாதிப்பால் சீர்குலைந்துள்ள இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற தற்சார்புபொருளாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்காக ரூ. 20 லட்சம் கோடி- அதாவது நாட்டின் ஜிடிபி-யில் 10 சதவிகிதத்தை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆரம்பத்தில், இந்த அறிவிப்பைக் கேட்டவர்களுக்கு, “பரவாயில்லையே.. அமெரிக்கா போன்ற உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக (ஜிடிபி சதவிகித அடிப்படையில்) இந்தியாவும் ஒரு பிரம்மாண்ட நிதித்தொகுப்பை அறிவித்திருக்கிறதே...” என்று வியந்தனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் டிவி சீரியல் போல, வரிசையாக 5 நாட்கள்ஊடகங்கள் முன்பு தோன்றி, ரூ. 20 லட்சம் கோடியை எந்தெந்த வகையில் தரப்போகிறோம் என்று நீண்ட கதாகாலட்சேபத்தை நடத்தினார்.ஆனால், இது 20 லட்சம் கோடி ரூபாய்க்கானதிட்டம் எல்லாம் கிடையாது; அதோடு ஒட்டுமொத்த இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதமும் கிடையாது என்று நிதித்துறை வல்லுநர்கள் மத்தியிலிருந்து கருத்துக்கள் எழுந்தன.

“பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ. லட்சத்து86 ஆயிரத்து 650 கோடி தான். இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்” என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மேலும், இந்தத் தொகை ஜிடிபிமதிப்பில் 0.91 சதவிகிதம் மட்டுமே என்றார். இந்நிலையில்தான் “கோல்ட் மேன் சாக்ஸ்”,“மோதிலால் ஓஸ்வால்”, “பிட்ச்”, “எஸ்பிஐ”, “எடல்வீஸ்”, “பார்களேஸ்” என பல உள்நாட்டு - வெளிநாட்டு பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும், இந்தியா அறிவித்துள்ள உண்மையான நிதியுதவி (Fiscal Cost)ஜிடிபி மதிப்பில் 1 சதவிகிதத்தைத் தாண்டாது என்று கூறியுள்ளன.

“மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடிதிட்டங்களில், பல அறிவிப்புகள் மற்றும் சில நிதிஉதவித் திட்டங்கள் முன்பே அறிவித்தவைகள் தான். உண்மையாகவே கொரோனாவுக்காக அறிவித்த நிதித் திட்டங்கள், இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 1 சதவிகிதம்தான்” என்று “பிட்ச் ரேட்டிங்ஸ்” நிறுவனம் கூறியுள்ளது. நிர்மலா சீதாராமன் அறிவித்த 20.97 லட்சம் கோடி ரூபாயில் 1.77 லட்சம் கோடிதான், 2020 - 21நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது ஒட்டு மொத்த ஜிடிபியில் வெறும் 0.8 சதவிகிதம்தான். இந்த 0.8 சதவிகிதத்தில் 0.34 சதவிகித பணத்துக்கான திட்டங்கள் மட்டுமே புதியவைகள். மீதமுள்ள 0.46 சதவிகித பணம் பழையதிட்டங்களில் இருந்து வருபவைகள் என சி.எல்.எஸ்.ஏ. அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல கோல்ட்மேன் சாக்ஸ் - 1.3 சதவிகிதம், யூ.பி.எஸ். - 1.2 சதவிகிதம், பாங்க் ஆப் அமெரிக்கா 1.1 சதவிகிதம், பிட்ச் ரேட்டிங்ஸ் மற்றும் ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் - 1.0 சதவிகிதம், எடல்வீஸ் - 0.84 சதவிகிதம், சி.எல்.எஸ்.ஏ. - 0.8 சதவிகிதம், பார்கிளேஸ் - 0.75 சதவிகிதம் என, இந்தியா ஒதுக்கியுள்ள நிதியின் உண்மையான ஜிடிபி சதவிகிதத்தை அம்பலப்படுத்தியுள்ளன.இவை அனைத்தும் சர்வதேச நிறுவனங்கள். 
ஆனால், பிரதமர் மோடி அறிவித்துள்ள தொகை, நாட்டின் ஜிடிபி-யில் - 1.3 சதவிகிதம் மட்டுமே என்று இந்தியாவைச் சேர்ந்த “மோதிலால் ஓஸ்வால்” நிறுவனமும் கூறியிருக்கிறது. “கோட்டக்” மற்றும் பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆகியவையும், நிவாரண நிதி அறிவிப்பு ஜிடிபி-யில் 1.0 சதவிகிதம்தான் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளது.எஸ்பிஐ-யின் முதன்மை பொருளாதார ஆலோசகர் செளம்ய கந்தி கோஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றிலும், “நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்கள், இந்திய பொருளாதாரத்தில், குறுகிய காலத்தில், நுகர்வை பெரிதாக அதிகரிக்க உதவாது. அரசின் அறிவிப்புகளாலும், திட்டங்களாலும், இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக, சுமார் 2 லட்சம் கோடி அளவிற்கே நிதி புழக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியர் - Editor