1000

வியூகங்கள் தோற்கும் போதெல்லாம் பெண்களின் மீதே உங்கள் பார்வை திரும்புமா?

வியூகங்கள் தோற்கும் போதெல்லாம் பெண்களின் மீதே உங்கள் பார்வை திரும்புமா?

கொரோனா இன்று உலக நாடுகள் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது.  இதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில் உலக நாடுகள் முழுவதும் இரு பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று கட்டுப்பாடு முதல் சவால் என்றால் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும்  பொருளாதார நெருக்கடி அடுத்த சவாலாக உள்ளது. இந்தியாவைப் பொருத்த மட்டில் இன்றைய தலைமுறையினர் கனவிலும் கண்டிராத இந்த ஊரடங்கின் முதல் ஒன்றிரண்டு நாட்கள் மிக உற்சாகத்தோடு கடந்தது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பெரும்பாலான குடும்பங்களின் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்வி பூதாகரமாக முன் வந்துள்ளது. கடும் நெருக்கடி காரணமாக ஆங்காங்கே சிலர் தற்கொலை செய்துள்ளனர். சில குடும்பங்களில் பெண்கள் மீதுதான தாக்குதல்கள் வழக்கத்தை விட அதிகரிக்க ஆரம்பித்தது. 

குடும்ப வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை 2020 மார்ச் 2ம் தேதியில் தொடங்கிய முதல் வாரத்தில் 30 ஆக இருந்தது ஆனால்,2020 மார்ச் 23 முதல் 2020 ஏப்ரல் 1 வரையிலான காலப்பகுதியில்,  இரு மடங்கிற்கும் மேலாக அதாவது 69 ஆக அதிகரித்துள்ளது என்று  தேசிய மகளிர் ஆணையம்- என்.சி.டபிள்யூ (NCW) தெரிவித்துள்ளது.  ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்திற்கான அழைப்புகளில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. "உண்மையான எண்ணிக்கை  மின்னஞ்சல்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டதை விட  அதிகமாக இருக்கக்கூடும். சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளன; அவர்கள் தங்களது புகார்களை தபால் மூலம் எங்களுக்கு அனுப்புகிறார்கள்" என்று மகளிர் ஆணையத்தின்  தலைவர் ரேகா ஷர்மா கூறினார்.

இதுதான் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலையும். இதையடுத்து பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. தற்போது 4 ம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியிலும் ஏதோ ஒரு புலம் பெயர் தொழிலாளியின் குழந்தை கால்களில் போட்டுள்ள செருப்புகள் தேய தேய நடந்து கொண்டிருக்கின்றனர். செருப்பு அறுந்து விட்ட குழந்தைகள் சுடும் கோடையில் திடு திடு வென ஓடி சாலையில் எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் சிறு நிழலில் ஒதுங்கி நின்று இழைப்பாறி விட்டு மீண்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். என்பதே அப்பட்டமான உண்மை இந்த நிலையில் தான் தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்த விவாத நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாத மத்திய ஆளும் கட்சி பிரமுகர் கரு.நாகராஜன்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை மிகவும் தரம் தாழ்ந்த வார்தைகளால் பேசி உள்ளார்.  அவர் தனது வாதமாக சகோதரிக்கு நான் ஒரு பதில் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்து ஜோதிமணி எம்பியா? கேவலமான ஒரு மகளிரா? என்று கொஞ்சமும் பதற்றம் ஏதும் இல்லாமல் மிகத் தெளிவாக பேசி உள்ளார். ஆம் அவரது சகோதரி என்றாலும் அவர் அப்படித்தான் பேசி இருப்பார். ஏனென்றால் அதுதான் அவர்களின் சித்தாந்தம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தது. 

இதுநாள் வரை கூட ஏதோ ஒரு சிறு நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. மத்திய அரசு ஏதாவது செய்து பசி பட்டினியோடு வீதிகளில் நடக்கும் மக்களை மீட்கும் என அப்பாவித்தனமாக எதிர்பார்த்தோம். ஆனால் தனிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் முடிந்தவரை மனிதன் அன்னார்ந்து பார்க்கும் விண்வெளித்துறை துவங்கி காலுக்கு அடியில் இருக்கும் நிலக்கரிவரை தனியார் மயப்படுத்தி தங்கள் அஜெண்டாவை முழு மூச்சாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மோடி அரசின் பாராமுகத்தை பார்த்துக்கொண்டே அரசை தேர்ந்தெடுத்தவர்கள் கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட நடக்க வேண்டியது தான் என்பதை கருநாகராஜனின் பேச்சு இப்போது தெளிவுபடுத்தி உள்ளது. அவர் ஒன்றும் தெரியாமல் எல்லாம் பேசவில்லை வழக்கம்போல் தங்கள் இயலாமையை பெண்களின் மீது வன்மமாக கக்கும் தொனியிலே பேசி உள்ளார். ஏனென்றால் சங் பரிவார அமைப்புகள் தங்களது வியூகங்கள் தோற்கும் சமயங்களில் எல்லாம் பெண்கள் மீதான வக்கிரத்தை கொட்டி நிலைமையை திசை திரும்ப முயல்வர் என்பதே வரலாறு.

ஆசிரியர் - Editor