1000

200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்

200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்

கொரோனா முடக்கிப்போட்ட தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலர் களத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ரூ.2 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும். படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு பிரித்து தரப்படும்.

இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பார்த்திபனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இவை அனைத்தும் முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

முக்கியமாக இந்த படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும். 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படம் ஓடிடி, டிவி உள்ளிட்ட தளங்களில் வெளியாகும். அதேபோல் தியேட்டரில் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகிறது என்பதை கணினி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் எனும் முடிவுக்கு பெரிய நடிகர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆசிரியர் - Editor